×

9 மாவட்டங்களில் நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 73.27% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 73.27% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.6,9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் 9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களில் உள்ள 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1577 கிராம பஞ்., தலைவர்கள், 12,252 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதில் சராசரியாக 77.43 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், அந்தப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 9 மாவட்டங்களில் மீதியுள்ள 35 ஒன்றியங்களில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 62 மாவட்ட கவுன்சிலர்கள், 626 ஒன்றிய கவுன்சிலர்கள், 1324 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 10,329 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்களை தேர்ந்தெடுக்க சுமார் 34 லட்சத்து 66 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களில் இன்று தேர்தல் நடக்கும் பகுதிகளில் 17 ஆயிரத்து 130 போலீசார், 3,405 ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 9 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டுவந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தல் பணியில் இருப்பவர்களால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் ஸ்ட்ரிமிங் கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் வாக்குப்பதிவு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன.

9 மாவட்டங்களில் நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 73.27% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் 72%, செங்கல்பட்டு 70%, விழுப்புரம் 83.6%, கள்ளக்குறிச்சி 82.0%, வேலூரில் 68.0%, ராணிப்பேட்டை 75.3%, திருப்பத்தூர் 73.5%, திருநெல்வேலி 65.0% தென்காசியில் 70.0 வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rural Inland Elections ,Electoral Commission , 73.27% turnout in 2nd phase local body elections held in 9 districts: State Election Commission
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...