×

அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ராகுலின் செல்வாக்கு என்ன?... ஏபிபி, ஐஏஎன்எஸ் சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ராகுலின் செல்வாக்கு குறித்து ஏபிபி, ஐஏஎன்எஸ் சி-வோட்டர் ஆகிய நிறுவனங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியும், மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏபிபி மற்றும் சி-வோட்டர் மற்றும் ஐஏஎன்ஐ ஆகிய ெசய்தி நிறுவனங்கள் சார்பில் மேற்கண்ட ஐந்து மாநில மக்களின் மனநிலையை அறியும் வகையில் புதிய கருத்துக் கணிப்பை நடத்தியது. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் செயல்பாடு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது, ஐந்து தேர்தல் மாநிலங்களிலும் 690  சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி கடந்த செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 4ம் தேதி  வரை நடத்தப்பட்டது.

அதன்படி, கிட்டத்தட்ட 40.5 சதவீத மக்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்  காந்தியின் அரசியல் செயல்பாட்டில் திருப்தியில்லை என்றும், 18.5  சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்றும் கூறியுள்ளனர். 20.2 சதவீதத்தினர் ஓரளவு  திருப்தி என்றனர். அதேநேரத்தில் 21  சதவீதம் பேர் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றனர். பஞ்சாபில்  காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்தும், ​​ராகுல் காந்தியின்  செயல்பாட்டில் 53.1 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றனர்.

6.7 சதவிகிதத்தினர் மட்டுமே மிகவும் திருப்தி என்றும், 18.9 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும் கூறினர். உத்தரகண்டில் 54.1 சதவீத மக்கள் ராகுலில் செயல்பாட்டில் கொஞ்சம் கூட திருப்தியில்லை என்றும், 14.7  சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்றும் என்றும் கூறினர். மணிப்பூரில்,  27.4 சதவீத மக்கள் ராகுல் காந்தியின் செயல்பாட்டில் மிகவும் திருப்தி  அடைந்துள்ளதாகவும், 21.5 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளதாகவும், 42.1 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் கூறினர்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 46.2 சதவீதம் பேர் ராகுலின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். அதேநேரம் 13.3 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்றும் கூறினர். கோவாவில் 40 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும், 16.1  சதவீதம் பேர் மிகவும் திருப்தி  என்றும், 23.2 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும் கூறியுள்ளனர்.  இந்த ஆய்வு 13,048 பேரிடம் நடத்தப்பட்டது.

Tags : Rahul ,ABB ,IANS , What is Rahul's influence in the 5 states where assembly elections will be held early next year?
× RELATED வயநாடு தொகுதியை தொடர்ந்து...