ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கில் ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: தமிழக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கியது.

இந்த மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு தற்போது விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் விசாரணை நடத்தி வருகிறது. காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை. அதனால் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 19ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, எதன் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது என கேள்வியெழுப்பிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்கலாம். ஆனால் உத்தரவு பிறப்பிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, இதுகுறித்து கேவியட் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி தொடர்பான சொத்து குவிப்பு விவகாரத்தில் போதிய ஆதாரம் உள்ளதால்தான் தற்போது இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி உத்தரவு வெளியிடுவதற்கு தடை என்பதை ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று ராஜேந்திர பாலாஜியின் மனுவில் முகாந்திரம் இல்லை என்பதால், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>