மானாமதுரையில் நவராத்திரி விழா: பக்தர்களை கவரும் கொலு பொம்மைகள்

மானாமதுரை: மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு அம்மன் சன்னதி மண்டபத்தில் உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு, விழா நடைபெறும் பத்து நாட்களும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. மானாமதுரை மேல்கரையில் உள்ள தியாக விநோத பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு சொர்க்கவாசல் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் இரவு உற்சவர் தியாக விநோத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வாகனங்களில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அதே போல மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்கர விநாயகர் கோயில், தாயமங்கலம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இக்கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டுள்ளன. மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு கோயில் யாகசாலையில் பிரம்மாண்ட கொலு  வைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.

மானாமதுரை ஒன்றியம் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு மண்பாண்ட பொருள்கள் தயாரிப்புக்கு பெயர்போன மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொலு அலங்கார பொம்மைகள் மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் கொலு பொம்மைகளை தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மானாமதுரையில் கொலு அலங்கார பொம்மைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

Related Stories:

More
>