மதுரை அருகே மேலூரில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலூர்: மேலூரில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் தங்களது கிராமத்திற்கு வரும் பஸ்கள் மற்றும் வேறு வாகனங்கள் மூலம் மேலூர் பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து தங்களது கல்வி நிலையங்களுக்கு பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தினசரி மேலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை, மாலை படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும் இவர்கள் பக்கவாட்டு ஜன்னல்களில் தொங்கியபடி சாகச பயணம் செய்கின்றனர். அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்தி இவர்களை பல முறை எச்சரித்தும் பயனில்லை.  மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் போது, ரோட்டில் நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் மீது மோதும் நிலை உள்ளது. பிடி தளர்ந்தால், தொங்கியபடி செல்லும் மாணவர்கள் நிலை படுமோசமாக மாறிவிடும். பஸ்சில் தொங்கி செல்வதில் மாணவர்களிடையே மோதலும் ஏற்படுகிறது.

செப்.27ல் மாணவர்களுக்குள் பெரும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கஷ்டத்தை உணராமல், இப்படி ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்து, உயிருடன் விளையாடுகின்றனர். போலீசார் மற்றும் கல்வி துறை இவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலூர் போலீசார் காலை மற்றும் மாலை வேளையில் பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, இவற்றை தடுக்க முன் வர வேண்டும்,’’என்றனர்.

Related Stories:

More
>