சென்னைக்குள் அதிக பாரம் ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளால் விபத்து ஏற்படுத்துவதை தடுக்க குழு அமைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னைக்குள் கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து ஆணையர், துறைமுக போக்குவரத்து மேலாளர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஜே.எஸ்.துறைமுக கன்சார்டியம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய துறைமுகங்களுக்கு வரக்கூடிய கன்டெய்னர் லாரிகள் எடையை அதிக அளவு எடுத்து வருவதால் பல இடங்களில் விபத்து ஏற்படுகின்றன.

குறிப்பாக 12 சக்கர வாகனம் கொண்ட கண்டெய்னர் லாரிகள் 13.5 டன் எடை அளவு மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். இதேபோல், லாரிகளின் அளவுக்கு ஏற்ப அவை கொண்டு செல்லும் சரக்குகளில் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கன்டெய்னர் லாரிகள் அதிக பாரத்தை ஏற்றி செல்வதனால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் பலியாகும் நிலை உள்ளது. சென்னை மாநகரத்தில் அதிக பாரம் ஏற்றிவரும் டிரைலர் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெறுவதால் அந்த சாலைகளில் அதிக பாரம் கொண்டு செல்லும் லாரிகளால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு பெரும் விபத்துகள் நடைபெறுகின்றன.

எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க உரிய வழிமுறைகளை வகுக்குமாறு அரசுக்கும், சென்னை துறைமுகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: ஏற்கனவே இதேபோன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த பிரச்னையை தீர்க்க சில வழிகாட்டுதல்களை வகுத்து உத்தரவிட்டிருந்தது.

 எனவே, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சென்னை மாநகர போக்குவரத்து ஆணையர், சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர், சென்னை துறைமுக போக்குவரத்து மேலாளர், சென்னை சர்வதேச முனையம், சென்னை சரக்கு பெட்டக முனையங்களின் பொது மேலாளர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி போக்குவரத்தை கண்காணிக்கும் குழுவை அமைத்து உரிய விதிகளை வகுக்க வேண்டும்.

இதன் மூலம் சென்னைக்குள் விதிகளுக்கு முரணாக அதிக சரக்குகளை ஏற்றிவரும் டிரைலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அந்த குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>