‘‘மாசம் தவறாம மாமூல் தர்றோம்... கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’’- ஏட்டுவிடம் மணல் லாரி அதிபர் பேசும் ஆடியோ வைரல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து விசாரித்தார். இதையடுத்து லாரி டிரைவர், போலீசிடம் மணல் லாரி சிக்கிய தகவலை சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளருக்கு தெரிவித்தார். உடனடியாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு செல்போனுக்கு தொடர்பு கொண்ட மணல் லாரி உரிமையாளர் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

செல்போனில் பேசும் லாரி உரிமையாளர், ‘‘நம்மோட 4 லாரி ஓடுது சார், அதோடு என்னுடைய மேனேஜரின் ஒரு லாரியும் ஓடுது. எல்லாவற்றுக்கும் சேர்த்து நம்ம இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சாருக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் கொடுத்துடறேன். இன்ஸ்பெக்டருக்கு, டிரைவர் உலகநாதன் மூலமா பணம் சேர்ந்திடும். ஸ்டேஷனுக்கு சேர வேண்டியதை சிலம்பரசன் சார் கிட்ட கொடுத்து விடுகிறோம். போன தடவைகூட அண்ணாமலை ஏட்டுவிடம் கொடுத்துட்டு வந்தேன். கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’ என சிரித்தபடியே சாதாரணமாக பதட்டம் இல்லாமல் பேசுகிறார்.

அதனால் விரக்தியடைந்த அந்த போலீஸ் ஏட்டு, ‘‘ஒரு லாரியை கூட எங்களால் மடக்க முடியல, ஒரு கேஸ் போட முடியல, கேட்டா இன்ஸ்பெக்டருக்கு மாமூல் கொடுக்கிறோம்னு சொல்கிறார்கள். நாங்க வேலை செய்கிறதா இல்ல, வெளியே போயிடுறதானு முழிச்சிகிட்டு இருக்கிறோம்’’ என புலம்பியபடியே செல்போனை துண்டிக்கிறார். இந்த செல்போன் உரையாடல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட ஆடியோவில் குறிப்பிடப்படும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனியார் பஸ் முதலாளிகளிடம் ஓவர்லோடு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க மாதம்தோறும் மாமூல் வசூலிப்பது குறித்த ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆடியோ தொடர்பாக திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ‘தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவில் பேசும் ஏட்டு வெளி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்றிருக்கிறார். அவர் பணி முடித்து திரும்பி வந்ததும், நடந்த சம்பவங்கள் குறித்து நேரடி விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சென்னைக்கு மணல் கடத்தல்

மணல் கடத்தலில் ஈடுபடும் லாரி உரிமையாளர், வாகன சோதனையில் லாரி பிடிபட்டபோதும் பதட்டம் ஏதும் இல்லாமல் பேசுவதன் மூலம் இந்த மாமூல் விவகாரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து இருக்கலாம் என தெரிகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அந்த பகுதியில் ஆற்று மணல் சூறையாடப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக, செய்யாற்றில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் வரிசையாக லாரிகள் மணல் கடத்திச்செல்கின்றன. ஆனால், மாவட்ட எல்லையான தூசியில் சோதனை நடத்த வேண்டிய போலீசார், மாமூல் வாங்கிக்கொண்டு விடுவித்து விடுவதாக ஏற்கனவே பரவலாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆடியோ அமைந்திருக்கிறது.

Related Stories:

More