×

குவாலிபயர்-1 போட்டியில் சிஎஸ்கே-டெல்லி நாளை மோதல்: இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?

துபாய்: 14வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிந்தன. லீக் சுற்று முடிவில் 14 போட்டிகளில் 10 வெற்றி, 4 தோல்வி என 20 புள்ளிகள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் முதல் இடம் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலா 9 வெற்றி,5 தோல்வி என 18 புள்ளிகள் எடுத்தன. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் சென்னை (0.455) 2வது இடத்தையும், பெங்களூரு (-0.140) 3வது இடத்தையும், கொல்கத்தா 7 வெற்றி,7 தோல்வி என 14 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

இந்த 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. மும்பை 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளை எடுத்தாலும் கேகேஆரை விட ரன்ரேட் குறைவாக இருந்ததால் பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது. 5வது இடத்தை பிடித்த மும்பை, 6வது இடத்தை பிடித்த பஞ்சாப் (12புள்ளி), 7வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் (10புள்ளி), கடைசி இடத்தை பிடித்த ஐதராபாத் (6புள்ளி) அணிகள் வெளியேறின. தொடரில் இன்று ஓய்வு நாளாகும். துபாயில் நாளை இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டி நடக்கிறது.

இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் சார்ஜாவில் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில், பட்டியலில் 3வது, 4வது இடங்களை பெற்ற பெங்களூரு-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும்.

வெற்றி பெறும் அணி, குவாலிபயர் 1 போட்டியில் தோல்வி அடையும் (சிஎஸ்கே அல்லது டெல்லி) அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இந்த போட்டி வரும் 13ம் தேதி சார்ஜாவில் நடக்கிறது. தொடர்ந்து சாம்பியன் மகுடத்திற்கான இறுதிப்போட்டி வரும் 15ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

Tags : CSK ,Delhi , CSK-Delhi clash tomorrow in Qualifier-1: Who will enter the final?
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி