உயிர்த்தெழுவார் என்று கூறி இறந்த தாயின் உடலுக்கு ஒரு வாரம் ஜெபம் செய்த மகள்கள்: திருச்சி அருகே பரபரப்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி(75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் அப்பகுதியில் ஊருக்கு வெளியே உள்ள வீட்டில் திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா(43), ஜெயந்தி(40) ஆகியோருடன் வசித்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் வீட்டில், 3 பேரும் சேர்ந்து ஜெபம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மேரியின் உறவினர் ஒருவர், அவரை பார்க்க சொக்கம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

உள்ளே ெசன்று பார்த்ததும் அந்த உறவினர் அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் வீட்டிற்குள், இறந்து போன மேரியின் உடலை வைத்து 2 மகள்களும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். உறவினரை பார்த்ததும் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி ஆகியோர் அவரை வெளியே அனுப்பி விட்டு மீண்டும் ஜெபத்தை தொடர்ந்தனர்.  இதையடுத்து அவர் அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவத்தை கூறி சென்று விட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் அங்கு சென்ற போலீசார் மேரி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் மகள்கள் இருவரும் உடனடியாக கதவை திறக்கவில்லை.  சிறிது நேரம் கழித்து கதவை திறந்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, லேசாக அழுகிய நிலையில் இருந்த மேரியின் உடல் மீது பைபிள் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்போது மேரியின் உடலை மீட்க முயன்ற போலீசாருடன் ஜெசிந்தாவும், ஜெயந்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பக்குவமாக பேசி, மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேரி இறந்து 1 வாரம் ஆகி இருக்கும் என்று தெரிவித்தனர். அப்போது ஜெசிந்தாவும், ஜெயந்தியும், எங்கள் தாய் மேரி இன்னும் இறக்கவில்லை, நாங்கள் ஜெபம் செய்தால் உயிர்த்தெழுவார் என கூறி டாக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>