×

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையில் ஆதாரம் இல்லை..யாரையும் அவசரப்பட்டு கைது செய்ய மாட்டோம்..'முதல்வர் யோகி திட்டவட்டம்

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளின் மீது கடந்த ஞாயிறன்று கார் ஏற்றப்பட்டதில், 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். விவசாயிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பத்திரிகையாளர், 4 பாஜ.வினரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபரான ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தலைமறைவாக இருந்து வந்தார். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், பாரபட்சமின்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தது. உத்தரப் பிரதேச போலீசின் நடவடிக்கைக்கும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். 2வது முறையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை அடுத்து, லக்கிம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி ஆஷிஷ் மிஸ்ரா வாக்குமூலம் அளித்து வருகிறார்.இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆதாரம் இன்றி யார் மீதும்  நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர். விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை. ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. யுகங்கள் அடிப்படையில் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். அதேநேரம் ஆதாரம் இருந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Tags : Lakkimpur farmers ,Yogi Tittavattam , முதல்வர் யோகி
× RELATED லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை...