ஊட்டியில் கடும் மேக மூட்டம்-வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி : ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேக மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் கடும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்வது வழக்கம்.

இந்த கால நிலை ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதம் மட்டுமே காணப்படும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெய்து வருகிறது. சூரியனை காண்பதே அரிதாக உள்ளது. தினமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்படுகிறது.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப்., தலைகுந்தா, காந்திநகர் போன்ற பகுதிகளில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது.

மேலும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. கடும் மேக மூட்டம் நிலவிய நிலையில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறினர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையல் நேற்று மாவட்டத்தில் குளிரும் சற்று அதிகமாக காணப்பட்டது.

Related Stories:

More
>