காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பட்டுப்போன மரங்களால் நோயாளிகள் `பக்.. பக்’

காளையார்கோவில் : காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவில் அரசு மருத்துவமனையை சுற்றிலும் பல்வேறு மரங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. இம்மரங்களுக்கு இடையே மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. பல வருடங்களாக பசுமையாக இருந்த மரங்களில்  சில மரங்கள் பட்டுப்போன நிலையில் எப்ழுது வேண்டுமானாலும் விழுந்து பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. அத்துடன் இந்த மரங்கள் மருத்துவமனை கட்டிடங்களுக்கு இடையே உள்ளது.

இந்த அரசு மருத்துவமனைக்கு காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 பஞ்சாயத்துகளில் உள்ள கிராம மக்கள் வருகின்றன. நோயை தீர்க்க வரும் இடத்தில் இது போன்ற பட்டுப்போன மரங்களால் பெரிய விபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பகுதியில்  சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. லேசான காற்று அடித்தால் கூட மரங்கள் விழும் நிலையில் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: