×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அலங்கோலமாகுது மன்னர் காலத்து ஆறுமுக கோட்டை-பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள சேதுபதி மன்னர் காலத்து ஆறுமுக கோட்டை சிதிலமடைந்து அலங்கோலமாகி வருகிறது. அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் அமைந்துள்ளது ஆறுமுக கோட்டை. ராமநாதபுரம் சேது சீமையை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜயரகுநாத சேதுபதியால், பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பானது 6 இதழ்களை கொண்ட ஒரு மலர் போன்ற வடிவில் அமைந்திருப்பதால்ஆறுமுக கோட்டை என பெயர் வந்துள்ளது.

மேலும், சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டையின் உள்பகுதியில் இருந்து எதிரிகளை தாக்கும் விதமாக, சுவர்களில் துளைகள் அமைக்கப்பட்டு அந்த துளைகளின் வழியாக  துப்பாக்கியால் எதிரிகளை சுடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிபி 1801ல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இக்கோட்டை சிதைக்கப்பட்டது. இதில் கோட்டையின் எஞ்சிய மதில் சுவர்கள் மட்டுமே மன்னர்கள் கால கோட்டை குறித்த அடையாளச் சின்னமாக உள்ளது. எனவே சேதுபதி மன்னர் கால அடையாள சின்னங்களில் ஒன்றாகத் திகழும் பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையின் மதில் சுவர்களை நமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாத்து சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : R. S. ,Ant Castle ,Mangala , RS Mangalam: Arumuga fort was demolished during the reign of King Sethupathi in Sengamadai village near RS Mangalam.
× RELATED கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி...