முக்கடல் அணை பூங்காவில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்- கண்காணிப்பு கேமராவில் பதிவு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகருக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை  செய்யப்படுகிறது. முக்கடல் அணை பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அணையின் முன்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விச்சுற்றுலா வசதிக்காக அறிவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.  கலை அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. திருமண போட்டோ ஷூட், சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடத்தும் வசதிகளும் உள்ளன.

இந்த நிலையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு  ஒரு சிறுத்தை பூங்காவுக்குள் வந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதுபோல் கடந்த 6ம் தேதியும், 7ம் தேதி இரவும் பூங்காவில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. புதர்களில் இருந்து வெளியே வரும் சிறுத்தை, பூங்கா சாலை வழியாக சென்று, பின்பு இருட்டான இடத்திற்குள் சென்று மறைகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, முக்கடல் அணையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையுள்ளது. இங்கு சிறுத்தைகள் உள்ளன. முக்கடல் அணை இரு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளதால், ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு இரவு நேரங்களில் சிறுத்தை அடிக்கடி செல்லும். தற்போது முக்கடல் அணை முன்பு பூங்கா அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அடிக்கடி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை பதிவாகி வருகிறது என்றார்.

Related Stories:

More