×

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 1,764 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்-பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணையிலிருந்து 1,764 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று காலை நீர்வரத்து 760 கனஅடியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றில் 820 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1,712 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1,902 கனஅடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் 35 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தென்பெண்ணை ஆற்று கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1,612 கனஅடியாகவும், அணையில் இருந்து 1,764 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஊத்தங்கரை வரை, தென்பெண்ணையாற்றின் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்ட அளவில் நீச்சல் பயிற்சி பெற்றவர்களும், மீட்பு குழுக்களும், 3,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல 5 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், குழந்தைகள் தென்பெண்ணை ஆற்றினை கடக்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ கூடாது. கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் முற்றிலும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர், கிருஷ்ணகிரி அணையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், பரிசல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்) காளிபிரியன், ஆர்ஐ ஜெயபிரபா, விஏஓ பாஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Krishnakiri Dam , Krishnagiri: As 1,764 cubic feet of water is being discharged from the Krishnagiri dam, the Collector personally inspected the coastal protection preparations.
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை பெய்துள்ளது : வானிலை மையம்