×

புதுச்சேரியில் முதல் முறையாக கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது-கோரிமேடு போலீசார் நடவடிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. பல்கலை, கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் வெளியே வந்து மீண்டும் இதே செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்னை புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த கனகராஜ் (26) என்பவரை கோரிமேடு போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்கும்போது கோரிமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதால் அவர் மீது என்டிபிஎஸ் என்ற போதை பொருள் தடுப்பு சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் வழக்கு பதிந்து கைது செய்வதற்காக கோரிமேடு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா, வடக்கு எஸ்பி சுபம் சுந்தர் கோஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தனர். கலெக்டர் பூர்வா கார்க் இதனை ஏற்று என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டார்.

காலாப்பட்டு சிறையில் கனகராஜ் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்த கடிதத்தை சிறை அதிகாரிகளிடம் கோரிமேடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று அளித்தார். கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது புதுச்சேரியில் இது தான் முதல் முறை. குண்டாஸ் பாய்ந்துள்ள கனகராஜ் மீது கோரிமேடு காவல்நிலையத்தில் 3 கஞ்சா வழக்குகளும், முதலியார்பேட்டையில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளன. இவை தவிர, மேட்டுப்பாளையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. என்டிபிஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஒரு ஆண்டிற்கு சிறையில் இருந்து  அவர் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

என்டிபிஎஸ் சட்டம் என்றால் என்ன?

போதை பொருள் தடுப்புக்காக 1985ல் என்டிபிஎஸ் (போதை பொருள் தடுப்பு சட்டம்) உருவாக்கப்பட்டது. 1985ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இச்சட்டம் 1989, 2001, 2014 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. போதை பொருள் தயாரித்தல், கடத்தல், விற்றல், பதுக்குதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்தும் குற்றம் என இச்சட்டத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 31ஏ படி போதை வழக்குகளில் சிக்குபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கப்படுகிறது. அதேநேரம், போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் வியாபாரிகள்போல அதிக அளவு தண்டனை கிடையாது.


Tags : Kundas ,Pondicherry , Pondicherry: Cannabis sales have been booming in Pondicherry recently. Targeting university, college, school students, youth
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது