×

மழையில்லாததால் வெம்பக்கோட்டை அணை வற்றியது-விவசாயிகள் கவலை

சிவகாசி : வெம்பக்கோட்டை அணைபகுதியில் மழையில்லாததால் அணை நீர் முழுவதும் வற்றியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 7.5 மீட்டராகும். வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் அணை நீர் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகாசி நகராட்சிக்கு இங்கிருந்து தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. அணையைச் சுற்றியுள்ள பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாயப் பணிகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் 4 மீட்டர் வரை அணைக்கு நீர்வரத்து இருந்தது. இதன் பின்னர் போதிய மழையில்லலாததால் அணைநீர் குறையத் தொடங்கியது. அணையில் இருந்த 4 மீட்டர் நீரில் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் குறைந்து கொண்டே இருந்தது. தற்போது அணை முற்றிலும் வற்றி விட்டது.

அணையின் மதகு பகுதியில் மட்டும் சிறிதளவு குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அணையில் நீர் வற்றியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆடு, மாடுகள் வளர்ப்பவர்களுக்கும் அணைநீர் பயன்பட்டு வந்தது. தற்போது போதிய மழையின்றி அணை வறண்டு வருவதால் ஆடு, மாடு வளர்ப்பவர்களும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ராஜா கூறுகையில், வெம்பக்கோட்டை அணை நீர் ஆதாரப் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் அணைக்கு குறைவான நீர் வரத்து இருந்தது. இருப்பினும் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது. தற்போது மழையின்றி அணைநீர் முழுவதும் வற்றி விட்டது. அணை வற்றியதால் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கிணற்று பாசனத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கவலை அளிக்கிறது என்றார்.

Tags : Vembakkottai dam , Sivakasi: Farmers in the Vembakkottai dam area have dried up due to lack of rain
× RELATED வெம்பக்கோட்டை அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக நீர் வெளியேற்றம்..!!