உதவி செய்வது போல் நடித்து தஞ்சை ஜிஹெச்சில் பெண் சிசு கடத்தல்: கட்டை பையில் தூக்கி சென்ற பெண்ணுக்கு வலை

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் உதவி செய்வது போல் நடித்த பெண், குழந்தையை கடத்தி சென்றார். கட்டைப்பையில் தூக்கி சென்ற பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(24). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(22). கடந்த ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு, பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4ம் தேதி தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 5ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் அதே வார்டில் இருந்த ஒரு பெண், கடந்த 4  நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவி செய்வது போல் நடித்து அவருடனே இருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மீது, ராஜலட்சுமி நம்பிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலை ராஜலட்சுமியிடம், நீங்கள் குளித்து விட்டு வாருங்கள். நான் குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து தனது குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு ராஜலட்சுமியும் குளிக்க சென்றார். பின்னர் ராஜலட்சுமி வந்து பார்த்தபோது குழந்தையை திடீர் காணவில்லை. குழந்தையை பார்த்து ெகாண்டிருந்த அந்த பெண்ணையும் காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி, தனது கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி பார்த்தும் குழந்தையும் கிடைக்கவில்லை. அந்த பெண்ணையும் காணவில்லை.இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் டிஎஸ்பி கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

இதில் ராஜலட்சுமிக்கு உதவி செய்து வந்த அந்த பெண் தான் ஒரு கட்டைப்பையில் பெண் சிசுவை வைத்து கடத்தி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பெண் குழந்தையை கடத்தி சென்ற பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், மருத்துவமனை வளாகத்துக்குள் 4 நாட்கள் அந்த பெண் இருந்தது எப்படி என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More