வரும் 15ம் தேதி முதல் ஏற்றுக்கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளர்களே கொடுக்க வேண்டும்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

சேலம்:சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மத்திய மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பின்னர், நிருபர்களிடம் குமாரசாமி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஆலைகள் முழுமையாக செயல்படாததால், லாரிகளுக்கான வாடகை போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் செலவீனங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 15ம் தேதி முதல், லாரிகளுக்கான ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, அட்டிக்கூலி மற்றும் மாமூல் போன்றவற்றை, சரக்கு உரிமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு 15 ஆண்டுகள் கடந்த லாரிகளை உடைத்து, கழித்து (ஸ்கிராப்) விடவேண்டும் என அறிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை ஒத்தி வைக்க வேண்டும். தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் பெரும் முதலாளிகள் கிடையாது. சுமார் 1.50 லட்சம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்களாகவும் உள்ளனர். ஸ்கிராப் அறிவிப்பால், சிறு லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த முடிவு லாரி தொழிலை நசுக்கி விடும் என்பதால், 15 ஆண்டு என்பதை நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>