×

கனடா செல்லும்போது அமெரிக்க படையிடம் சிக்கினர் 64 இலங்கை அகதிகள் தமிழகத்தில் இருந்து தப்பினர்: 108 முகாம்களில் விபரங்களை சேகரிக்கும் க்யூ பிரிவினர்

சென்னை: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது, அகதிகளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்தனர். அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் மண்டபம் முகாம் உட்பட மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 108 அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாமில் 65 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 ஆயிரம் பேர் வெளியில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக க்யூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மாலத்தீவு அடுத்த டிக்கோ கார்சியா என்ற அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்குள் சட்டவிரோதமாக படகில் கனடா சென்ற நபர்களை அமெரிக்க கடற்படையினர் சிறைப்பிடித்ததாக கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. தப்பிய 64 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு நெல்லையில் ஒன்று கூடி ரூ.45 லட்சம் ரூபாய்க்கு இந்திய பதிவு பெற்ற படகு ஒன்று சொந்தமாக வாங்கி, கேரள துறைமுகம் வழியாக மாலத்தீவு சென்றது தெரியவந்துள்ளது. பிறகு மாலத்தீவில் இருந்து பயணத்துக்க தேவையான உணவு மற்றும் எரிபொருட்களை படகில் நிரப்பி கொண்டு தென்னாப்பிரிக்கா வழியாக கனடாவுக்கு பயணம் செய்ய இருந்தது தெரியவந்துள்ளது. மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக சிக்கியதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய உளவுத்துறை போலீசார் அளித்த தகவலின்படி, தமிழக அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாமில் இருந்து மாயமான 64 பேர் யார் யார் என்பது குறித்த பட்டியலை தற்போது க்யூ பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். அதேநேரம் கள்ளத்தோணியில் கனடா செல்ல இவர்களுக்கு உதவி செய்த நபர்கள் குறித்தும் உளவுத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதை க்யூ பிரிவு உயர் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 64 அகதிகள் குறித்து இன்டர்போல் உதவியை க்யூ பிரிவு போலீசார் நாடியுள்ளனர். தமிழகத்தில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக படகில் 64 இலங்கை அகதிகள் தப்பி செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : US ,Tamil Nadu ,Canada , Canadian, US Army, Sri Lankan refugee
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!