×

ஆந்திரா-தெலங்கானா அரசுகள் கோதாவரி-காவிரி இணைப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: 2 மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: கோதாவரியில் ஆண்டுக்கு 1100 டிஎம்சி வரை உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு திருப்பி விடும் வகையில் கோதாவாரி-கிருஷ்ணா-பெண்ணாறு-பாலாறு-காவிரியில் திருப்பி விட மத்திய அரசு முடிவு செய்ததது. இதற்காக கோதாவரி - கிருஷ்ணா -பெண்ணையாறு, பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு ஆகியவற்றை ரூ.60 ஆயிரம் கோடியில்  இணைக்க வரைவு திட்ட அறிக்கையை  தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்தது. அதன் மீதான கருத்துக்களையும் கேட்டது. இதில், தமிழக அரசு சார்பில் 83 டிஎம்சிக்கு பதிலாக 300 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

அதே போன்று கல்லணையில் இணைப்பதற்கு பதிலாக கட்டளை கதவணையில் இணைக்க வேண்டும். அப்போது தான் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாயில் தண்ணீரை எடுத்து செல்லவும் ஏதுவாக இருக்கும் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு கருத்துரு அனுப்பியிருந்தது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா இரு மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் தமிழகத்துக்கு 250 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Andhra Pradesh ,Telangana ,Government of Tamil Nadu , Andhra-Telangana, Government, Godavari-Cauvery Link, State Government, Government of Tamil Nadu
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...