×

68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடாவின் கைக்கு சென்றது ஏர் இந்தியா: ரூ.18,000 கோடிக்கு ஏலம் எடுத்தது

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம், 68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் கைகளில் சேர்ந்துள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதில், ஒன்றிய பாஜ அரசு படு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சி மேற்கொண்டது.  இந்த நிறுவனத்தை டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் வாங்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில்,  ஒன்றிய அரசிடம் உள்ள ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளை, டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் நிறுவனத்துக்கு விற்க, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர்  பியூஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அடங்கிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த குழு, இது ஏர் இந்தியா மாற்று வழிமுறைக்காக அமைக்கப்பட்ட அதிகாரம் பெற்ற குழு.    ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்க டாடா சன்ஸ் துணை நிறுவனத்தால் கேட்கப்பட்ட ஏலத்தொகை ரூ.18,000 கோடி. இந்த பரிவர்த்தனையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் அடங்கவில்லை. இதற்கான மதிப்பு ரூ.14,718 கோடி ஒன்றிய அரசின்  ஏர் இந்தியாவின் சொத்து நிறுவனத்துக்கு மாற்றப்படும். ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை விற்பதற்கான நடைமுறை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுடன் தொடங்கியது.

டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட், ரூ.18,000 கோடிக்கு ஏலம் கேட்டது எனவும், அஜய் சிங் தலைமையிலான கூட்டமைப்பு ரூ.15,100 கோடிக்கு கேட்டது எனவும், இந்த 2 ஏலங்களும், நிர்ணய விலையான ரூ.12,906 கோடியைவிட அதிகம் எனவும் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏல விற்பனையை உறுதிப்படுத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை அதிகாரி துகின் கண்டா பாண்டே, மேற்கண்ட ஏலத்துக்கான பரிவர்த்தனைகள், இந்த ஆண்டுக்குள் முடிவையும். ஏல  தொகையில், ஏர் இந்தியாவின் கடன் சுமையில் ரூ.15,300 கோடியை டாடா குழுமம் வைத்துக் கொண்டு, ரூ.2,700 கோடியை மட்டும் ஒன்றிய அரசுக்கு ரொக்கமாக வழங்கும் என தெரிவித்தார்.

ஏர் இந்தியாவை டாடா வாங்கினாலும், அதன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓராண்டுக்கு பணியில் நீடிப்பார்கள் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா நிறுவனம், முதன் முதலாக, 1932ல் டாடா சன்ஸ் நிறுவனத்தால் துவக்கப்பட்டது. வணிக ரீதியாக செயல்பாடு துவங்கிய பிறகு, இந்த நிறுவனத்தை 1953ம் ஆண்டு தேசியமயம் ஆக்கப்பட்டது. பாலிவுட் நடிகர்களின் விளம்பரங்கள் இடம்பெற்றன. மிகவும் பிரபலமான இந்த நிறுவனம், தனியார் விமான நிறுவனங்களின் போட்டிக்கு பிறகு, நஷ்டத்தில் இயங்க துவங்கியது. இந்தியன் ஏர்லைன்சுடன் சேர்த்த பிறகு இந்த நிறுவனம் லாபகரமாக இயங்கவில்லை. இந்நிலையில், 68 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, மீண்டும் டாடா குழும நிறுவனத்தின் கைகளிலேயே ஏர் இந்தியா சேர்ந்துள்ளது.

கைமாறிய கதை
1932: டாடா சன்ஸ் நிறுவனத்தால் ஏர் இந்தியா தொடங்கப்பட்டது.
1953: ஏர் இந்தியா தேசியமயம் ஆக்கப்பட்டது
2000-01: அப்போதைய, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு, ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க முயன்றது. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பால்  இது கைவிடப்பட்டது.
2004-14: காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்ைல.
2018, ஜூன் : ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்க ஒன்றிய பாஜ அரசு அறிவிப்பு வெளியிட்டது.
2020, ஜன.: 100 சதவீத ஏர் இந்தியா பங்குகளையும் விற்க ஒன்றிய அரசு முன்வந்தது.
2021 ஏப்: விருப்ப ஏலங்களை ஒன்றிய அரசு வரவேற்றது: செப்டம்பர் 15 கடைசி தேதி.
2021 செப்: டாடா குழுமம், ஸ்பைஸ்ஜெட் அஜய்சிங் ஏலம் கேட்டனர்.
2021: அக்: மீண்டும் டாடா குழு கைகளுக்கு ரூ.18,000 கோடியில் கைமாறியது ஏர் இந்தியா.

Tags : Air India ,Tata , Tata, Air India, Auction,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...