தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனியார்  பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக தாக்கல்  செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார்  பள்ளிகளில் சொத்து வரி வசூலிக்க கடந்த 2018ம் ஆண்டு அரசாணை  வெளியிடப்பட்டது.  இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் பளிகள்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை  விசாரித்த நீதிமன்றம், இது அரசு கொள்கை சார்ந்தது எனக்கூறி கடந்த 2019ம்  ஆண்டு தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற  உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  சஞ்ஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாதத்தில், ‘அரசு  பள்ளிகளுக்கு வழங்குவது போன்று தனியார் பள்ளிகளுக்கும் அனைத்து சலுகைகளும்  வழங்க வேண்டும். மேலும் இதில் குறிப்பாக சொத்துவரியில் இருந்து விலக்கு  அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட  நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>