×

நேரடியாக விசாரிப்பது போல் வராது ஆன்லைன் விசாரணை திருப்தி அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: `நீதிமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு திரையை பார்த்து வழக்கை விசாரிப்பது, தகுந்த பலன் அளிக்கவில்லை,’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொது முடக்கம் அமலுக்கு வந்ததில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை முறை ரத்து செய்யப்பட்டது. வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நேரடி விசாரணையை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், `வரும் 20ம் தேதி முதல், வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் மட்டும் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும்,’ என தெரிவித்தது.

இந்த விசாரணையின்போது, வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளைப் பின்பற்றி நீதிமன்றம் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க காணொலி மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை தொடர வேண்டும் என்று தன்னார்வ அமைப்பு சார்பில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் ஸ்வரூப், `அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க காணொலி மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை முறை தொடர வேண்டும்.

இது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். தொலைதூர கிராமங்களில் உள்ள மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, ஆன்லைன் விசாரணை முறையும் தொடர வேண்டும்,’ என்று வாதிட்டார். அவருடைய வாதத்தை கேட்ட நீதிபதிகள் அமர்வு, `ஆன்லைன் விசாரணை போதுமென்றால், இந்த நீதிமன்றத்தை மூடி விட வேண்டியதுதான். மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

அதே நேரம், நீதிமன்றம் காணொலி விசாரணை நடத்த வேண்டும் என்று புத்திமதி சொல்ல தேவையில்லை. ஆன்லைன் விசாரணையில் திரையை மட்டும் பார்த்து கொண்டிருப்பதும், ஒவ்வொரு வழக்கறிஞர்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து வாதிடுவதும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நேருக்கு நேர் விசாரித்து வழக்கை முடித்து வைப்பது போன்ற திருப்தி ஆன்லைனில் இல்லை. எனவே, ஆன்லைன் விசாரணையில் தகுந்த பலன் அளிக்கவில்லை,’ என்று கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court , Online trial, Supreme Court, Corona,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...