அருணாச்சல பிரதேச எல்லையில் ஊடுருவிய சீன வீரர்கள் சிறைபிடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த வாரம் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த தாக்குதலில் பல சீன வீரர்கள் காயமடைந்தனர். மேலும், சில சீன வீரர்களையும் இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்தாண்டு மே மாதம் இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், எல்லையில் இருநாடும் ராணுவத்தை குவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டது. தற்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பதற்றம் தணிக்கப்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் நடத்திய 12 கட்டப் பேச்சுவார்த்தையின் விளைவாக, பாங்காக் திசோ உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டும் இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன. மற்ற  இடங்களில் இருந்து படைகளை விலக்கி கொள்வது பற்றி அடுத்த சில நாட்களில் 13ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக, எல்லையில் சீனா வழக்கம் போல் அத்துமீறலில் ஈடுபடுவது அதிகமாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் லடாக் எல்லையில் தனது ராணுவத்தை மேலும் குவித்தது. இதற்கு பதிலடியாக, இந்தியாவும் வீரர்களை குவித்தது மட்டுமின்றி, பீரங்கி படையையும் எல்லைக்கு அனுப்பியது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள பூம்லா கணவாய் - யாங்க்சே இடையிலான எல்லை பகுதியில், 200க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கடந்த வாரம் ரோந்து சென்றனர். அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு முகாம்களை அழிக்க முயன்றனர். இதை பார்த்தும் இந்திய வீரர்கள் தடுத்தனர். இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் தாக்கியதில் பல சீன வீரர்கள் காயமடைந்தனர். இதனால், சீன வீரர்கள் பின்வாங்கினர். தப்பிச் செல்ல முயன்ற அவர்களில் சில வீரர்களை, இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர்.

பின்னர், சீன ராணுவ உயரதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றனர். இருதரப்பு அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதலில் இந்திய வீரர்களுக்கோ, உள்கட்டமைப்பு வசதிகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

* லடாக் எல்லையில் கல்வானில் நடந்த மோதலுக்குப் பிறகு, 17 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு ராணுவமும் மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் மோதியுள்ளன.

* இந்த மாநிலத்தில் உள்ள தவாங் எல்லையில் கடைசியாக கடந்த 2016ல் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய ராணுவம் முறியடித்தது.

Related Stories:

More
>