×

சிறுவர்கள், இளைஞர்களுக்கு இந்தியாவில் அதிக தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா தொற்று பற்றிய வாராந்திர ஆய்வு விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த வாரத்துக்கான ஆய்வறிக்கையை நேற்று அது வெளியிட்டது. அதில்,  கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவை சேர்ந்த 19 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. 9,500 கொரோனா நோயாளிகளிடம் இருந்து வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 0-19 வயதினர், பெண்களிடையே அதிக எண்ணிக்கையில் நோய் தொற்று ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. அதிக இறப்புக்களும் பதிவாகி உள்ளது.

அதே நேரம், உலகளவில் வாராந்திர கொரோனா தொற்று, இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்நிலை நீடிக்கிறது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரையிலான வாரத்தில் 31 லட்சம் புதிய பாதிப்புகளும், 54 ஆயிரம் புதிய இறப்புகளும் பதிவாகி உள்ளன. கடந்த வாரத்தை விட  9 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூற்ப்பட்டுள்ளது.  

புதிய தொற்று
 ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்றால் நேற்று புதிதாக 21,257 பேர் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569 ஆக உயர்ந்துள்ளது 271 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4,50,127 ஆக உயர்ந்துள்ளது. புதிய பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 14வது நாளாக 30 ஆயிரத்துக்குள் இருந்து வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : India ,World Health Organization , Children, Youth, India, World Health Organization
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...