முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர் குழுவா? உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச நிபுணர் குழு ஆய்வு செய்வதற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், மக்களுக்கு பாதிப்புகள் வராமல் நடவடிக்கை எடுப்பதிலும் துணைக்குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த 1886ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,’ என சுரக்‌ஷா என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்கள் குழுவை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘‘வெளிநாட்டு நிபுணர்களுக்கு இணையான நிபுணர்கள்,  இந்தியாவிலும் உள்ளனர். ஏன், உங்களுக்கு இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லை? நீங்கள் சொல்வது ஒரு நாளில் செய்யக் கூடிய வேலை கிடையாது,’ என குறிப்பிட்டனர்.  அப்போது குறுக்கிட்ட கேரள அரசு வழக்கறிஞர், ‘இந்த வழக்கு இதற்கு முன் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால், தற்போது வரையில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படவில்லை,’ என்றார்.  ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அந்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து, அணை தொடர்பான செயல்பாடுகள், நீர்மட்டம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை வரும் 25ம் தேதிக்குள்  தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More
>