×

தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

மும்பை:  ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது:  வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 8வது முறையாக எவ்வித மாற்றமுமின்றி 4 சதவீதமாக தொடரும். இதுபோல் ரிசர்வ் ரெப்போ வட்டி  3.35 சதவீதமாக தொடரும். வரும் 2022ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.  இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் உள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை.

 நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 9.5 சதவீதமாக இருக்கும். ஐஎம்பிஎஸ் முறையில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது. இது 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.  இதுபோல், இணையதள வசதியின்றி, மொபைல்கள் மற்றும் வங்கி டெபிட் கார்டுகள் மூலம் பணம் அனுப்பும் முறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பரிசோதனை ரீதியாக செயல்படுத்தப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.200 என்ற அளவில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

Tags : Repo Interest, IMPS, Transaction
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது