×

ஐஎஸ்எல் கால்பந்து பரிசுத்தொகையில் மாற்றம் லீக் சுற்றில் முதலிடம் பிடித்தால் ரூ.3.5 கோடி : சாம்பியனுக்கு ரூ.2 கோடி குறைப்பு

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்  தொகை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.3.5 கோடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாக் அவுட் சுற்றில் வென்று சாம்பியனாகும் அணிக்கான பரிசுத் தொகை ரூ.8 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக குறைக்கப்படுகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 8வது சீசன் ஆட்டங்கள் நவ.19ம் தேதி முதல் கோவாவில் மட்டும் நடக்க உள்ளது. இந்நிலையில்  லீக் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை இந்த ஆண்டு முதல்  அதிகரித்துள்ளதாக  ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சீசன் வரை சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.8 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 கோடியும் வழங்கப்பட்டது. அரையிறுதிக்கு முன்னேறிய மற்ற 2 அணிகளுக்கும் தலா ரூ.1.5 கோடி அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக லீக் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணிகளுக்கு கேடயமும், ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இப்போது  லீக் சுற்றில்  முதல் இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கும்  பரிசுத் தொகை அதிரடியாக ரூ.3.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பைனலில் வென்று சாம்பியனாகும் அணிக்கும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி  சாம்பியனுக்கு ரூ.6 கோடி, 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடி வழங்கப்படும். அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு வழங்கப்படும் தலா ரூ.1.5 கோடியில் மாற்றமில்லை. இது குறித்து ஐஎஸ்எல் நிர்வாகிகள் கூறுகையில், ‘சாம்பியனுக்கு பரிசுத் தொகை குறைக்கப்படவில்லை. லீக் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியனானால் அந்த அணிக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.9.5 கோடியாக இருக்கும். அதேபோல் லீக் சுற்றில் முதல் இடம் பிடிக்கும்  அணி 2வது இடம் பிடித்தால் அந்த அணிக்கு ரூ.6.5 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.

அதனால் பரிசுத்தொகை குறைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி லீக் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி,  அரையிறுதிக்கு முன்னேறுவதின் மூலம் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். அதனால் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதே சரி’ என்றனர்.

Tags : ISL , ISL Football, League Round, Champion,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை