×

பிஎன்பி பாரிபா ஓபனில் மாரத்தான் போராட்டம்: டிரெவிசான் முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசான் சுமார் 4 மணி நேரம் போராடி செக் குடியரசின் மரி போஸ்கோவாவை வீழ்த்தினார். அமெரிக்காவில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் சுற்றில் மார்டினா  டிரெவிசன் (27வயது, 66வது ரேங்க்) - மரி போஸ்கோவா (23வயது, 93வது ரேங்க்) மோதினர். உலக தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும், இருவரும் சமபலத்தை வெளிப்படுத்தியதால் ஒவ்வொரு செட்டும் முடிய நீண்ட நேரம் ஆனது.  முதல் செட்டை டிரெவிசான்  6-4 என்ற கணக்கில் வசப்படுத்தி முன்னிலை பெற்றார்.

அடுத்து டை பிரேக்கர் வரை  நீண்ட 2வது செட்டை போஸ்கோவா 7-6 (10-8) என்ற  கணக்கில்  போராடி வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இதனால் 3வது செட்டிலும் அனல் பறந்தது. கடும் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் டிரெவிசான் 6-4, 6-7 (8-10), 6-4 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இப்போட்டி 3 மணி, 52 நிமிடங்களுக்கு நீடித்தது. நடப்பு சீசனில் மிக நீண்ட நேரத்துக்கு நடந்த 2வது போட்டியாக இது அமைந்தது. 2021ல் நடந்த 3 செட் ஆட்டங்களில், குகோவா - கோர்காட்ஸ் இடையயான போட்டி 3 மணி, 55 நிமிடத்துக்கு நீடித்ததே முதலிடத்தில் உள்ளது.

முன்னணி வீராங்கனைகள் அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா), அனஸ்டேசியா செவஸ்டோவா (லாட்வியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். சானியா ஜோடி அதிர்ச்சி: மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா - ஷுவாய் ஸாங் (சீனா) இணை 6-4, 3-6, 13-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அவோயமா - ஷிபாஹரா ஜோடியிடம் போராடி தோற்றது.


Tags : Marathon Struggle ,BNP Bariba Open , BNP Bariba Open, Marathon, Travison,
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் படோசா: ஒசாகா அதிர்ச்சி தோல்வி