×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் வாக்களிக்க ஏற்பாடு.!

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 6ம் தேதி 9 மாவட்டங்களில் 23,998  இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 77.43 சதவீதம் ஓட்டு பதிவாகியது.  இந்நிலையில், 9 மாவட்டங்களில் இன்று 2ம்  கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 626 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6,652 வாக்குசாவடிகளில் நடைபெறும்.  வாக்குச்சாவடி  மையங்களில் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில்  வெப்  ஸ்ட்ரிமிங்  கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும் மற்றும்  சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் வாக்குப்பதிவு  நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள் 35 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.  அன்றைய தினம் காலை 8 மணிக்கு 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட இறுதி நிலவர அறிக்கை: முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் வார்டு எண் 2 மற்றும் 3க்கென பொதுவாக அமைக்கப்பட்ட இரு வார்டு வாக்குச்சாவடி என்.130 (அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி)ல் 2வது வார்டுக்கான உறுப்பினர் பதவியிடம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வார்டை சேர்ந்த 45 வாக்காளர்கள் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு நடந்த தேர்தலுக்காக வாக்களித்திருப்பதாக தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்து வார்டு 3ல் மறுதேர்தல் நடத்திட அனுமதி கோரியதன் அடிப்படையில் சிவசைலம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு மட்டும் 9.10.2021 அன்று மறுவாக்குப்பதிவு நடத்திட ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : 9th District ,Rural ,Elections , 9 District Rural Local Elections: Second Phase Voting Today: Arrange to vote from 7 am!
× RELATED குருங்குளம் ஊராட்சியில் ஈச்சங்கோட்டை...