முன்ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு: போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க, காவல்துறைக்கு  உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செப்டம்பர் 24ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற்றதால், இவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது எனவும் காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Related Stories:

More
>