செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை துறை: டாக்டர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சார்பில், உலக இருதய தினத்தையொட்டி வழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இதய நோய் கண்டறியும் முகாம் நடந்தது. மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மருத்துவ கல்லூரி துணை முதல்வர் அனிதா, நிலைய மருத்துவ அலுவலர் அனுபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி, இதயத்துறை மருத்துவர்கள் ரகோத்தமன், சுரேஷ்குமார், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இதயத்துறையில் நவீன சிகிச்சை குறித்து பேசினர். இது குறித்து, மருத்துவக்குழுவினர் கூறியதாவது.

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில், 1989ம் ஆண்டு முதல் இதய சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதய பிரிவு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 4 முதுகலை மாணவர்கள்  இங்கு பயின்று வருகிறார்கள். மேலும், இதய உள்ளூடுருவி மையம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை 1400 ஏழை, எளிய மக்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை  வெற்றிகரமாக செய்துள்ளது. இதில் 50 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு குறைவானவர்கள். 4 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இதய நோயாளிகள் இத்தகைய சிறப்பு சிகிச்சை பெறுவதற்கு சென்னை அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அல்லது தனியார் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை  செலவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், தினசரி 200 பேருக்கு புறநோயாளிகள் பிரிவில் இசிஜி மற்றும் எக்கோ எடுக்கப்படுகிறது.  

ஒரு நாளில் சுமார் 30 முதல் 40 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆஞ்சியோகிராம் செய்பவர்களில் மாதந்தோறும் 30 முதல் 40 பேருக்கு இருதய பைபாஸ் சிகிச்சை  தேவைப்படும் சூழ்நிலையில், இங்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு போதுமான வசதிகள் இல்லை. இதனால், அவர்களை சென்னை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இதய மாற்று அறுவை சிகிச்சை துறை  தொடங்கினால், நோயாளிகள் அதிகளவில்  பயனடைவர்.  இதையொட்டி, தமிழக அரசுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைத்துறை இங்கு தொடங்க,  மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்றனர்.

Related Stories:

More
>