தபால் ஓட்டு வழங்கக் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயிலின் அருகே தபால் ஓட்டு வழங்கக் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, மாவட்டத்தில், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்கள், தினமும் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள 300 அங்கன்வாடி ஊழியர்களுக்கு வாக்குகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைடைந்த அங்கன்வாடி ஊழியர்கள், காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு, நேற்று திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய எங்களை, வாக்குகள் செலுத்த முடியதபடி ஒன்றிய நிர்வாகம் செயல்படுகிறது என கோஷமிட்டனர். தகவலறிந்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசி கலைய செய்தனர்.

Related Stories:

More