×

நாளை 5வது மெகா கொரோனா முகாம் 48,000 பேருக்கு 600 மையங்களில் தடுப்பூசி: காஞ்சி கலெக்டர் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும்  10ம் தேதி நடக்க உள்ள 5வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 48 ஆயிரம் பேருக்கு, 600 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7,26,000 பேர்களில் கோவிஷுல்டு மற்றும் கோவேக்சின் முதல் தவணையாக 6,32,638 பேருக்கும் (87%), 2வது தவணையாக 1,77,430 பேருக்கு (25%) ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை தினமும் முகாம்கள், வாரந்தோறும் நடக்கும் மெகா முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வாரந்தோறும் நடக்கும் மெகா முகாம்கள் மூலம் இதுவரை முதல் தவணை 98,404 பேருக்கும், 2வது தவணை 44,637 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் வரும் 10ம் தேதி மெகா முகாம் 600 மையங்களில் நடத்தும்போது, தடுப்பூசி செலுத்துவோர் மற்றும் பயனாளிகளை முகாம்களுக்கு அழைத்துவர அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.  இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் சுமார் 48 ஆயிரம் பேருக்கு 600 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று முதல் 3 நாட்களுக்கு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆட்டோவில் (ஒலிப்பெருக்கி மூலம்) மற்றும் வீடு வீடாக சென்று விழிப்புணர் ஏற்படுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு, அவர்களது வீட்டுக்கு சென்று நடமாடும் மருத்துவக்குழு மூலம் தடுப்பூசி வழங்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2வது தவணை போட்டுக்கொள்ள வேண்டிய அனைத்து பயனாளிகளின்  விவரங்கள் அந்தந்த வட்டாரம் மற்றும் நகராட்சிக்கு அனுப்பிவைத்து, அவர்கள் தவறாமல் முகாமில் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Corona Camp , Tomorrow 5th Mega Corona Camp 48,000 people will be vaccinated at 600 centers: Kanchi Collector interview
× RELATED கொரோனா சிறப்பு முகாமில் ஒரே...