×

அனைத்து தர நெற்களையும் கொள்முதல் செய்ய கோரி அக்.11ல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

வாடிப்பட்டி: மதுரை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அனைத்து தர நெற்களையும் கொள்முதல் செய்திட வலியுறுத்தி அக்.11ல் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பேரணை முதல் மதுரை மாவட்டம் கள்ளந்திரி வரை முதல்போக நெல் சாகுபடி பணிகள் நிறைவு பெற்று தற்போது அறுவடை பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்திட வலியுறுத்தி வந்த நிலையில், அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்றவாறு அமைத்து வருகிறது.

ஆனால் அங்கு கொள்முதல் செய்யப்படும் நெற்களின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது மழை காலமாக உள்ளதால் விவசாயிகள் நெற்களின் ஈரப்பதம் சற்று அதிகரித்துள்ளதால் கொள்முதல் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிபட்டி கிராமத்தில் கட்சி சார்பற்ற அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து தர நெற்களையும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட வலியுறுத்தி வருகிற 11ம் தேதி வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தை  ஒருங்கிணைக்க ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.


Tags : Ack.11 , Purchasing, farmers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி