கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்: என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு'என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்..!

சென்னை: நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர் - உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர் என கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65) சென்னையில் இன்று காலமானார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். புகழ்பெற்ற பல பாடல்கள் எழுதிய இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது: நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர் - உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>