×

சோலைபசுங்கிளியே பாடலை எழுதிய தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார்!: திரைத்துறையினர் இரங்கல்..!!

சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பிறந்த கவிஞர் பிறைசூடன், 1985ம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலூன்றியவர் பிறைசூடன். 1980களில் இருந்து இளையராஜாவோடு பயணித்து வந்த பிறைசூடன், இளையராஜாவின் பல்வேறு படங்களுக்கு முக்கிய பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி, சோலைபசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா உள்ளிட்ட பாடல்கள் பிறைசூடனுக்கு பெருமையை தேடி கொடுத்தது. பணக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது.

இதில், சோலைபசுங்கிளியே பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றார். தாயகம், என் ராசாவின் மனசிலே போன்ற படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும்,  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். தொடர்ந்து இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழ் திரையின் இசை ஜாம்பவான்களிடம் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 65 வயதாகும் பிறைசூடன் இன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மரணம் குறித்து அவருடைய மகன் மிகுந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார். பிறைசூடனின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் தமிழ் மொழி அறிஞராகவும் இவருடைய பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.


Tags : Soliebunanglie , Tamil film songwriter, Prasoodan, has passed away
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...