×

கோவில் நிலங்களுக்கு வாடகை செலுத்த இணையதள வசதி : அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று 08.10.2021 இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள், மடங்கள், திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள், குறிப்பிட்ட அறக்கட்டளைகள், சமணத் திருக்கோயில்கள் மற்றும் இவற்றுடன் இணைந்த உபக்கோயில்கள் மொத்தம் 44,287 உள்ளன. இவற்றில் 5,509 அறநிறுவனங்கள் சொத்துக்களின் மூலம் வருமானம் ஈட்டக்கூடியவையாகவும், 38,778 அறநிறுவனங்கள் சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டாதவையாகவும் உள்ளன. இந்த அறநிறுவனங்களுக்கு  ரூபாய் 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்கள், 22,600 கட்டிடங்கள், 33,665 காலிமனைகள் உள்ளடக்கிய 3,55,719 சொத்துக்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களை, பொது ஏலம்/டெண்டர் மூலம் வாடகைக்கு குத்தகைக்கு வழங்குதல் குறித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்விதிகளின்படி திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்கள் பொது ஏலம்/டெண்டர் மூலம் வாடகைக்கு/ குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலங்களின் வாடகைதாரர் விவரம் கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில் பதியப்படுகிறது. திருக்கோயில் நிலங்களின் வாடகைத் தொகையினை முறையாக வசூல் செய்யவும், ஒளிவு மறைவு அற்ற வகையில் அமையும் வண்ணம் கேட்பு, வசூல், நிலுவை விவரம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோயில் நிலங்களின் வாடகைதாரர்/ குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை/குத்தகைத் தொகையினை இணையதளம் வாயிலாகவே செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் வாடகை/குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்/வாடகைதாரர்கள் வழக்கம் போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் செலுத்துச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாகும். மேலும், வசூல் முறையாக நடக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துக்களை ஏலத்திற்கு/குத்தகைக்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயினைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வசூல் நிலுவை தொடர்பான புள்ளி விபரங்களை, மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகம், முதன்மைச் செயலாளர், ஆணையர் ஆகியோர் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாக அமையும். இந்நேர்வில், முறையாக குத்தகை/வாடகை செலுத்தாத இனங்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க முடியும். அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் கேட்பு வசூல் நிலுவை விவரத்தை கணினி மயமாக்கி, திருக்கோயில்களின் கேட்பு நிலுவைகளை முறைப்படுத்துவதன் மூலம், அறநிறுவனங்களுக்கான வருமானத்தை பெருக்குவதுடன், வருமானத்தைக் கொண்டு திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். பக்தர்கள் எளிதாக இணையதள வசதியை பயன்படுத்தி வாடகை தொகையினை செலுத்திக் கெள்ளலாம்.


Tags : Minister ,Sebabu , அமைச்சர் சேகர்பாபு
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...