பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம்: பாஜ தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிதல் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து கோயில்களும் மூடப்படுகிறது.

இந்நிலையில், பண்டிகை நாட்களாக இருப்பதால் தினமும் கோயில்களை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில், இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாரிமுனை பகுதியில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பாஜ.வினரின் ஆர்ப்பாட்டத்தால் இந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில் பாரிமுனையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாஜ தலைவர் அண்ணாமலை, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், கு.க.செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>