திருப்பதியில் இன்று 2ம் நாள் பிரம்மோற்சவம்: சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம்நாள் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர 9நாள் பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கோடி தேவதைகளை வரவேற்கும் விதமாக நேற்று மாலை 5.10 மணி முதல் 5.30 மணிக்கு இடையே அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தங்க கொடிமரத்தில் கருட உருவம் வரையப்பட்ட பிரம்மோற்சவ மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும், அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் பிரமோற்சவத்தின் முதல் நாளில் ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். பிரம்மோற்சவ 2ம் நாளான இன்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சி தந்தார். வாசுகி எனும் பாம்பின் மீது அமர்ந்தபடி மலையப்ப சுவாமி காட்சி தந்தார். இதில் தேவஸ்தான உயரதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். இன்றிரவு அன்ன வாகனத்திலும், நாளை காலை சிம்ம வாகனத்திலும் அருள்பாலிக்க உள்ளார். வரும் 11ம் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவில் முக்கிய நிகழ்வான கருடசேவையும் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டாவது தரிசனம் கிடைக்குமா?

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடைபெறக்கூடிய 9 நாட்களும் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒருசில வாகனங்களில் தேவி, பூதேவியருடன் வலம் வருவார். சுவாமியை தரிசிக்க நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருப்பார்கள். சுவாமி மாடவீதியில் வந்தவுடன் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தியுடன் தரிசனம் செய்வார்கள். அப்போது சுவாமி ஊர்வலத்தின்போது பக்தர்களின் கோலாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம் என ஆடல் பாடல்கள் இடம்பெறும். இதனால் திருமலை முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

ஆனால் கொரோனா 3வது அலையை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மூலவரை தரிசிக்கும் பக்தர்கள் கல்யாண மண்டபத்தில் காட்சி தரும் சுவாமியை தரிசிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கொரோனா பரவல் முற்றிலும் நீங்கி அடுத்த ஆண்டாவது பிரம்மோற்சவ நாயகனை மாடவீதியில் தரிசிக்க முடியுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More
>