×

தனியார் பள்ளிகள் சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு விளக்கம் தர சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

டெல்லி: தனியார் பள்ளிகள் சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 800 தனியார் பள்ளிகளை கொண்ட சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதில், 2018ம் ஆண்டு தமிழக அரசானது, அரசு பள்ளிகளுக்கு சொத்துவரி கட்ட விலக்கு அளித்துவிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் சொத்துவரி கட்ட வேண்டும் என்று சட்டம் விதித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே மாநில அரசின் நிதி குழுவானது, அனைத்து பள்ளிகளுக்குமே சொத்துவரி கட்டுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அரசை பொறுத்தவரையில் பரிந்துரையை புறந்தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டும் சொத்துவரி கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். எனவே தமிழக அரசின் இத்தகைய சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கினை 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தனியார் பள்ளிகள் சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும் 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையானது 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


Tags : Government of Tamil Nadu , Private School, Property Tax, Tamil Nadu Ara, Supreme Court
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...