திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் ஆமை வேகத்தில் நடக்கும் கால்வாய் பணி-ஆம்புலன்ஸ், அரசு பஸ்கள் சிக்கி தவிப்பு

திருப்பத்தூர் : தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது. கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வரும் வாகனங்களும், திருப்பத்தூரில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்புப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. குறைந்த அளவிலான ஆட்கள் பணி செய்வதால் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் முடியாமல் இழுபறி ஆகியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் பகல் நேரங்களில் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கிறது.

கால்வாய் சீரமைப்புப்பணி நடைபெறுவதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப்பாதை வசதிகள் செய்து கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இரவு நேரங்களில் இப்பணிகளை செய்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம், பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை குழாய் இணைப்புகள் அங்கு அதிகமாக உள்ளதால் மிக கவனமுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 25 சதவீதம் பணிகள் முடிவுப்பெற்றுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழித்தடம் தேர்வு செய்தோம். ஆனால், தொடர் மழை காரணமாக மாற்றுவழித்தடம் சேரும், சகதியுமாக இருப்பதால் அங்கு வாகன போக்குவரத்தை அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வெகுவிரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories:

More
>