விவசாயிகள் படுகொலை : ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யாமல், தயவுசெய்து வாருங்கள் என கெஞ்சுவது ஏன் ?: உ.பி.அரசுக்கு நீதிபதிகள் காட்டம்!!

டெல்லி : லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூரில் அரசு விழாவில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் உபி துணை முதல்வர் கேசவ் மவுரியா, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்றனர். அப்போது, அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராதான் காரை எற்றி விவசாயிகளை கொன்றதா குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் தலைமை நீதிபதி என்வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹேமா கோலி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக அவருக்கு கால அவகாசம் கொடுத்து உத்தரவை பிறப்பித்துள்ளோம். ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.உயிரிழந்தவர்கள் உடலில் துப்பாக்கிக் குண்டு காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்படவில்லை, என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமா?. லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா?. லக்கிம்பூரில் மிக மோசமாக படுகொலை நடந்து இருக்கிறது. துப்பாக்கிச்சூடு எல்லாம் நடந்து இருக்கிறது. உ.பி.யின் லக்கிம்பூரில் நடந்துள்ள நிகழ்வுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். ஐபிசி 302ன் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. ஆனால் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராக அழைப்பாணை கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா?.வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா ?.

லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவரை கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சிக் கொண்டு இருப்பது ஏன்?.தயவு செய்து வாருங்கள், தயவு செய்து கூறுங்கள் என்று ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீஸ் கெஞ்சுவது ஏன்?. கொலை வழக்கில் மற்ற கைதிகளை எப்படி நடத்துவீர்களோ அந்த முறையிலேயே ஆஷிஷ் மிஸ்ராவை நடத்த வேண்டும்.எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளோம் என்று கூறுவது சரியல்ல. லக்கிம்பூர் விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை.மாநில அரசும் போலீசும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வன்முறை தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை பாதுகாக்க வேண்டும், என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More
>