×

பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை-விரட்ட முயன்ற விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி தமிழகம் -கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்திற்குள் புகுந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சித்தனர். அப்போது கோயில் வளாகத்தில் இருந்த  தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை தும்பிக்கையால் தள்ளி கீழே போட்டு மிதித்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

பண்ணாரி கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குருமூர்த்தி (50) என்பவரது விவசாய தோட்டத்திற்குள் நுழைந்தது. யானையைக் கண்ட விவசாயி குருமூர்த்தி அக்கம்பக்கத்து விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானையை விரட்ட முற்பட்டார்.

அப்போது யானை குருமூர்த்தியை துரத்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  யானை தும்பிக்கையால் குருமூர்த்தியை தாக்கியதால்  கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  
அக்கம்பக்கத்தினர் குருமூர்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் வனத்துறையினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pannari Amman , Satyamangalam: The Satyamangalam Tiger Reserve is home to a large number of wild elephants in the Pannari Amman Kovil forest. These are
× RELATED அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பண்ணாரி அம்மன் ஊர்வலம்