நாகை மாவட்டத்தில் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ள 2,500 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார்-வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

நாகை : வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தலைமை வகித்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார். அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் பேசியதாவது: தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு கூடுதல் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் இயல்பான மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவை தூர்வரும் பணி 90 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 சமுதாயக் கூடமும், 73 திருமண மண்டபங்கள், 29 முன்எச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் உள்ளன. 134 தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 215 பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள், 2 ஆயிரத்து 366 ஆண் முதல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மணல் மூட்டைகள், பாலிதின் பைகள், சவுக்கு குச்சிகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் 100 பாதுகாப்பான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை, காவல்துறை பேரிடர் கால மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

எஸ்பி ஜவஹர், மாவட்ட வன அலுவலகர் யோகேஷ்குமார்மீனா, டிஆர்ஓ ஷகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ராஜசேகரன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, நாகை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, நாகை தாசில்தார் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

134 இடங்கள் ஆபத்தான பகுதி

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். சேதமடைந்த பாதுகாப்பு மையங்கள் கண்டறியப்பட்டு அவைகள் பழுது நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான பகுதி, மிதமான பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் என 134 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வெட்டாறு, வளப்பனாறு உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 14 ஆறுகளின் அருகில் வசிக்கும் மக்களை பேரிடர் காலங்களில் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழையால் சேதமடைந்து 33 சதவீதத்திற்கும் மேல் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணீந்திரரெட்டி கூறினார்.

Related Stories:

More