×

கன்னியாகுமரி பகவதி அம்மன் அசுரனை வேட்டையாடிய நவராத்திரி நாயகி

நாகர்கோவில் : அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் தேவர்களுக்கும், பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க, தென் கோடி முனையில் முக்கடலும் சங்கமிக்கிற கன்னியாகுமரிக்கு வந்து தவம் செய்தாள். கன்னியாக இருந்த அவளை திருமணம் செய்ய தாணுமாலயன் சுவாமி வந்தார்.

கன்னி, மணம் செய்தால் பாணாசுரனை வதைக்க முடியாது என்பதால், அந்த திருமணத்தை தடை செய்ய நாரதரை தூண்டினார் திருமால். நாரதர், தாணுமாலையனிடம் கன்னி பகவதியை சூரிய உதயத்துக்கு முன் மணம் செய்வது உகந்தது. இல்லையென்றால் மணம் நிகழாது என்கிறார். சிவனும், அதற்கு இசைந்தார். சிவன் மண நாளில், சூரியோதத்துக்கு முன் புறப்பட்டு வந்த போது நாரதர் வழுக்கம்பாறை கிராமத்தில் இருந்து சேவல் போல் கூவினார். தாணுமாலையன்சுவாமி, விடிந்து விட்டது என திரும்பி விட்டார். இதனால் பகவதி கன்னியாக இருந்தார். இதன் பிறகு பாணாசுரன், கன்னி குமரியின் அழகை கேள்வியுற்று அவளை திருமணம் செய்ய வந்தான். தேவி இது தான் தருணம் என நினைத்து வாளை வீசி, பாணாசுரனை வீழ்த்தினாள் என்பது புராணம்.

இதே போல் மற்றொரு புராண கதையில், அசுரர்களின் கொடுமையை பொறுக்க முடியாத தேவர்கள், காசி விஸ்வநாதரை அணுகினர். அவர் இரு பெண்களை படைத்தார். ஒருத்தி கொல்கத்தாவில் காளியாக அமர்ந்தாள். மற்றொருத்தி கன்னியாகுமரியில் இருந்தாள். இப்படியொரு கதையும் தலபுராணத்தில் உள்ளது. ஆனால் பாணாசுரனை, வீழ்த்தும் வகையில் தான் பரிவேட்டையும் நடந்தேறுகிறது.  இக்கோயிலில் கருவறை கிழக்கு நோக்கியதாகினும் வடக்கு வாசலே பிரதானமாய் இருக்கிறது. 19ம் நூற்றாண்டில் கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்றதை பற்றி ‘கன்னியாகுமரி களவு மாலை’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிறகு சில காரணங்களால் இந்த கோயிலின் கிழக்கு வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வெளிப்பிரகாரம், முக மண்டபம், நவராத்திரி மண்டபம், தியான மண்டபம், உள் பிரகாரம், கருவறையைச் சுற்றிய சிறு பிரகாரம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்தது. இக்கோயில் செவ்வக வடிவிலானது. செப்பு கொடிமரம், திராவிட வகை விமானம், பரிவார கோயில்கள், சிறு பிரகாரம் என அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்தில் மேல் பகுதியில் கஜலட்சுமி உருவம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் மேற்கு பகுதியில் கொலு மண்டபம் எனப்படும் நவராத்திரி மண்டபமும், கிழக்கில் பக்தர்கள் உட்கார்ந்து இளைப்பாற சிறு மண்டபமும் உள்ளன.

இந்த முன் மண்டபத்தின் முன்பகுதியில் பக்தர்கள் கோயில் குறித்த விபரங்களை கேட்கும் தகவல் மைய அறை உள்ளது. எட்டு தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில் இரண்டு யாளித்தூண்கள் உள்ளன. இந்த மண்டபம் 17 அல்லது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இம்மண்டபத்தின் மேற்கில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா கொலு வைக்கும் நிகழ்வு நடைபெறும். இம்மண்டபத்தின் மேற்கில் 4 சிறு தூண்கள் கொண்ட ஊஞ்சல் மேடை உள்ளது. இவ்வூஞ்சலில் அம்மனது விழா படிமத்தை வைத்து ஆட்டுவது உண்டு. இக்கொலு மண்டபத்தில் புராண இதிகாச எண்ணெய் சாய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அண்மைக்காலத்தவை ஆகும். முக மண்டபத்தில் கிழக்கில் நீண்டு காணப்படும் பக்கவாட்டு மண்டபம் ஒரு காலத்தில் பயணிகள் தங்குமிடமாக இருந்தது. இதற்கேற்ற திண்ணையும் இங்கு உள்ளது.

முக மண்டபத்தின் வடக்கே தெற்கு நோக்கி கால பைரவர் இருக்கிறார். இந்த மண்டபத்தை மணி மண்டபம் என்கின்றனர். மண்டபத்தின் மேற்கூரை ஜன்னல் வழி கருவறை விமானத்தை தரிசிக்கலாம். இதனையடுத்து வடக்கு பிரகாரம் உள்ளது. இப்பிரகாரத்தில் திருக்கிணறு உள்ளது. இக்கிணற்றிற்கு கருவறையில் இருந்து அடிவரை இறங்கி செல்ல சுரங்கப்பாதை உண்டு. வடக்கு பிரகாரத்தில் ஒரு தூணில் உள்ள ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரியவராக இருக்கிறார்.

கிழக்கு பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. செம்பு போர்த்தப்பட்ட இக்கொடிமரம் 19ம் நூற்றாண்டிலானது ஆகும். இந்த பிரகாரத்தில் அர்த்த மண்டபத்திற்கு நுழையும் வாசலில் இரு துவார பாலகிகள் உள்ளனர். இடது துவார பாலகி ஒரு கையில் கதை ஏந்தி உள்ளார். கிழக்கு பிரகாரத்தில் கோயில் மணி இருப்பதால் இது மணிமண்டபம் என அழைக்கப்படுகிறது. எட்டு தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தின் மேல் விதானம் வேலைப்பாடுடையது ஆகும்.

கிழக்கு பிரகாரம் பலிபீடம் கொடிமரத்தை கடந்து அர்த்த மண்டபம் உள்ளது. எட்டு தூண்கள், செப்பு வேயப்பட்டது ஆகும். இம்மண்டபத்தின் தென் மேற்கே தியாக சவுந்தரி சன்னதி உள்ளது. இம்மண்டப வடக்கில் வாசல் உண்டு. அர்த்த மண்டபத்தின் தெற்கு வாசல் வழி உட்பிரகாரம் செல்லலாம். இது மூன்றாம் பிரகாரம் மிக சிறியது. இங்கு கன்னி விநாயகர் சன்னதி உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும் தரைமட்டத்தை விட உயர்ந்தவை. கருவறை அந்தராளம் என்னும் பகுதியை உடையது. இந்த மண்டப சுவர்களில் முழுக்க முழுக்க பழந்தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன. கருவறை அதிஷ்டானம், விமானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டி, வேதிகை என முறைப்படி அமைந்த பழைய கட்டுமானம் ஆகும். கருவறையின் மேலும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

கருவறை சிறியது. அர்த்த மண்டபத்தில் இருந்து அம்மனை தரிசிப்பவர்கள் நேராக பார்க்க முடியும். பிற கோயில்களில் இருந்து ேவறுபடும் இடம். சாதாரண  பக்தர்கள் கருவறை தெய்வத்தை அருகில் நின்று தரிசிப்பது போன்ற அமைப்புடையது. கல்படிமம் நின்ற கோலம். ஒரு கையில் உத்திராட்சத்தை பிடித்திருப்பது போன்ற அமைப்பு. விரல்கள் வளைந்திருக்கின்றன. ஒரு கை வரதமுத்திரை காட்டுகிறது. அம்மனின் மூக்கில் உள்ள மூக்குத்தியின் கல் நாகம் உமிழ்ந்தது. அந்த ஒளி கிழக்கு வாசல் வழி வீசியதால், கடலில் சென்ற கப்பல் வழி தவறி வந்தது என்ற ஒரு கதையும் உண்டு. வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பார்த்து மரத்தடி சாஸ்தா. இவருடன் நாகர் உருவங்கள் உள்ளன. இதே பிரகாரத்தில் குருபகவான் உள்ளார்.

பகவதி நிலை பெற்ற இத் தலத்தில் சக்கர தீர்த்தம், கணேச தீர்த்தம், தாணு தீர்த்தம், பீம தீர்த்தம், பிதுர் தீர்த்தம், மாத்ரு தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பிராமணி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் பெயரிலும் தீர்த்தங்கள் உள்ளன. இந்திரன் தன் பாவம் தீர நீராடிய பாபநாச தீர்த்தம் இங்கே உள்ளது. சூதாடிய தர்மரின் கையில் நெருப்பை வைப்பேன் என்று சொன்னதால் சாபம் பெற்ற பீமன், விமோசனம் பெற கன்னியாகுமரிக்கு வந்து நீராடியதாகவும் கூறுகிறார்கள். பீமன் நீராடிய இடமே பீம தீர்த்தம் ஆயிற்று. பரசுராமர் இங்கு வந்து கணேசனை பூஜித்தார். அந்த இடம் கணேச தீர்த்தம் ஆயிற்று. இப்படியாக பலருக்கு பாப விமோசனம் வழங்கிய தலமாக கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது.

பரிவேட்டை

இக்கோயிலில் காலை 4.30க்கு திருநடை திறப்பு, காலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 தீபாராதனை, காலை 10 மணி அபிஷேகம், 11.30 உச்சகால பூஜை, பகல் 12.30 திருநடை அடைப்பு. மாலை 4 மணி திருநடை திறப்பு, மாலை 6.30 சாயரட்சை தீபாராதனை, இரவு 8.15 பலி, இரவு 8.25 ஏகாந்த தீபாராதனை, இரவு 8.30 திருநடை அடைப்பு ஆகியன நடக்கிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 6ம் தேதி தொடங்கி உள்ளது.

15ம் தேதி வரை நடக்கிறது. வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரத்தை தருபவள் கன்னியாகுமரி தேவி, நவராத்திரி நிறைவு விழாவில் வெள்ளி குதிரை வாகனத்தில் மகாதானபுரம் வரை பரிவேட்டைக்கு செல்வாள். இங்கு அசுரனை அழித்து காட்டும் நிகழ்ச்சி நடந்தேறும். பின்னர் கரியக்காரர் மடத்தில் இளைப்பாறி, ஆறாட்டு மண்டபத்தில் நீராடி திருக்கோயிலுக்குள் தேவி செல்வார்.

Tags : Kanyakumari Bhagwati , Nagercoil: Banasura, the king of the Asuras. He caused great suffering to the gods and to the earthly people. Only by parasakti to destroy him
× RELATED கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு