தண்டவாளத்தில் பாறை, மண் விழுந்ததால் மேட்டுப்பாளைம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்றும் ரத்து

மேட்டுப்பாளையம் :  ரயில் பாதையில் பாறை, மண் சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரயில் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ரயில் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில் க்ரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் ஹில் க்ரோவ் ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி மலை ரயில் 180 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்திலிருந்து நேற்று காலை புறப்பட்டது.

கல்லார் நிலையத்தை கடந்து ரயில் சென்றபோது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண் சரிந்து ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததை பார்த்தார். இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்கு திரும்ப கொண்டு வரப்பட்டது. பின்னர் மலை ரயிலின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கல்லாரில் இருந்து ஊட்டிக்கு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் இயற்கை அழகை ரசித்தபடி ரயிலில் ஊட்டி செல்லலாம் என்று நினைத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி நடப்பதால் மலை ரயில் இயக்கம் இன்று (8ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (9ம் தேதி) முதல் மலை ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: