×

மிரட்டி பணம் பறிக்‍கவே போதை பொருள் வழக்கில் ஷாருக்‍கான் மகன் கைது!: மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் மீண்டும் அதிரடி கருத்து..!!

மும்பை: மிரட்டி பணம் பறிக்‍கவே ஷாருக்‍கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதை பொருள் தடுப்பு பிரிவின் பணம் பறிக்கும் செயல் அம்பலமாகும் என்றும் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் மீண்டும் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஷாருக்‍கான் மகன் ஆர்யன் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஆர்யன் கானை 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் ஆர்யன் கான் கைது மிரட்டி பணம் பறிக்‍கும் செயல் என மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் விமர்சனம் செய்துள்ளார். போதை பொருள் தடுப்பு பிரிவின் பணம் பறிக்கும் செயல் விரைவில் அம்பலமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், மராட்டிய அரசை அவமானப்படுத்தவே இந்த போதைப்பொருள் சோதனை நாடகம் என்றும் மும்பை போதைப்பொருள் சோதனையே போலியான ஒன்று என்றும் தெரிவித்திருந்தார். தங்களது அடுத்த குறி ஷாருக்கான் என்று கடந்த ஒருமாதகாலமாகவே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் செய்தியாளர்களிடம் கூறி வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக்‍கான் மகன் கைதுக்கும், பாஜகவிற்கும் தொடர்புள்ளதாக நவாப் மாலிக் தெரிவித்திருந்த கருத்து ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விளக்கம் அளித்திருந்தாலும் மராட்டிய அமைச்சரே அந்த மாநில போலீசாரின் நடவடிக்கையை விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sharukhukhukan ,Minister ,Nawab Malik , Money, Drugs, Shah Rukh Khan's son, Maratha Minister Nawab Malik
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...