திருவள்ளுவர் பல்கலை முன்னாள் அதிகாரி அசோகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவாரூர்: வருமானத்திற்கு அதிகமாக 63% சொத்து சேர்த்ததாக திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகனின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் கடந்த 2013 நவம்பர் முதல் 2016 நவம்பர் வரை பணி புரிந்தவர் அசோகன்.

அவர் பணியாற்றிய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத 6 பேரை போலி ஆவணங்கள் மூலம் பணியாற்றியதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. நீதிமன்றம் தலையிட்டதால் கடந்த அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தேர்வு தாளை வாங்க டெண்டர் விடாமலும், தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎல்லில் வாங்காமலும் ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வாங்கி அசோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

6 ஆண்டுகள் மாணவர்கள் எழுதிய பழைய தேர்வு தாளை தனது நண்பருக்கு குறைந்த விலைக்கு விற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக 63% சொத்து சேர்த்ததாக அசோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் அருகேயுள்ள மேலஇருக்காட்டூர் மற்றும் வேலூரில் உள்ள அசோகனின் வீடுகளில் 12 மணி நேரம் சோதனை நடந்தது. அப்போது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>